• Save

பள்ளிக்கல்வியில் இரு சிறிய மாற்றங்கள்.

வணக்கம். நான் உங்கள் அன்பு சகோதரன் வினோத் எழுதுகிறேன்.

சமீப காலமாக நம் நாடு சென்று கொண்டிருக்கும் பாதை மிகவும் கடினமாக உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். சமூகத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள், குடும்பங்களில் எண்ணில் அடங்கா குழப்பங்கள், தனிமனிதர்களிடம் சொல்ல முடியா மனக்குமுறல்கள் என பல விதங்களில் நம் வாழ்க்கை நம் மனநிலையை வாட்டி வதைக்கிறது.

வேலைகள் கடினமாகி விட்டன, வேலை நேரங்கள் நீண்டுவிட்டன, சம்பளம் போதவில்லை, கிரெடிட் கார்டு மற்றும் கடன்கள் கையை முறிக்கின்றன, வட்டிகள் கட்டியே உழைத்த பணம் வீணாகிறது. இது போதாதென்று பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், இவற்றால் சேமிப்பு பணம் அதிகமாக விரையம், என பல வேதனைகள். இவற்றிற்கிடையில் நம் பிள்ளைகளை எப்படி பொறுப்பாக வளர்க்க முடியும் என்ற கவலை நம்மில் பல பேரிடம் பயமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நம் நிகழ்காலமே இவ்வளவு பயங்கரமாக இருக்கும் பட்சத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் உங்களுக்கு வருகிறதா? அவர்களால் பின்வரும் காலங்களில் பிழைக்க முடியுமா? அதையும் தாண்டி முன்னேற முடியுமா? அப்படி முன்னேறினாலும் இந்தக் சமுதாயம் அவர்களை இன்பமாக வாழ விடுமா?

இது போன்ற கேள்விகள் உங்களுக்கு வந்தால், பதற வேண்டாம். சற்று  நிதானமாக தொடர்ந்து படியுங்கள்.

பிள்ளைகளுக்கு கல்வி மிகவும் அவசியம் தான். அதனால் தான் அவர்களை ‘படி, படி’ என்று அதட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்களை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதாது, அவர்கள் உண்மையிலேயே நன்றாக படிக்க சில வழிகளும் செய்து தர வேண்டும்.

எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மருத்துவர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும், அது, இது என்று தங்கள் கனவுகளை தங்க பிள்ளைகளின் வாழ்க்கையில் திணிப்பது ஒரு வழக்கம் ஆகிவிட்டது. அவ்வாறு செய்து, தங்கள் பிள்ளைகள் அதிகம் சம்பாரிக்க வேண்டும், சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று காரணம் சொல்வதும் வழக்கமாகிவிட்டது விட்டது. இப்படி பழக்கங்களில் இருந்து மீள பல திரைப்படங்கள்  கூட வந்துவிட்டன. அனால் அதையும் தாண்டி, பிள்ளைகள் நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என்று அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவது தொடர்ந்து நடந்துகொண்டு தானே இருக்கிறது?

நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை இன்பமாக வாழ சொல்லி கொடுக்கிறோம்? நாமே இன்பத்தை தேடி அலைகிறோமே, பின் எப்படி நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது?

குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையை அமைக்க பெற்றோர் உதவ வேண்டுமே தவிர, தங்கள் விருப்பம்போல் குழந்தைகள் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவது மிகவும் தவறு. அதையும் மீறி குழந்தைகளை வற்புறுத்தினால் அவர்கள் பின்னாட்களில் ஏங்கி தவிப்பர் என்பதை புரிந்து கொள்வோம். இதை என்றும் மனதில் ஏற்றுக்கொள்வோம்.

அடுத்து, அவர்கள் கல்வி கற்கும் முறையை மாற்ற வேண்டும். கற்கும் முறை என்றால் அவர்களின் syllabus-ஐ மாற்றுவதோ, அல்லது tuitions சென்று படிப்பதோ அல்ல, அவர்கள் எந்த பாடம் படித்தாலும் அதன் கருத்துக்களை உள்வாங்கும் ஆற்றலை அதிகப்படுத்துவது. இதற்கு நாம் அவர்களை சிறு வயதிலிருந்தே தயார் செய்ய வேண்டும். இப்படி மாற்றம் செய்ய நாம் சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது யதார்த்தம். நாம் ஆரம்பிக்க வேண்டியது குழந்தைகளின் வயதிற்கேற்ப அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளும் இடத்தில் தான்.

முதலாவதாக, ஐந்திலிருந்து பத்து வயது உள்ள குழந்தைகள்.

குழந்தைகள் அதிகம் மனவளர்ச்சி காணும் காலங்கள் அவை. அவ்வயதில் அவர்களிடம் நாம் புத்தகங்களை படிப்பது எப்படி என்று சொல்லித்தர வேண்டும். பாட புத்தகங்கள் மட்டும் அல்ல, பொழுதுபோக்கு புத்தகங்களும் தான். சிறுகதைகள் முதல் காவியங்கள் வரை படிக்கும் முறையை முதலில் சொல்லிக்கொடுக்க வேண்டும். வார்த்தைகளின் அர்த்தங்களை உதாரணங்களுடன் சொல்ல வேண்டும். வார்த்தைகளின் உச்சரிப்பை (phonetics) கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் அகராதிகளை (dictionaries) பயன்படுத்தும் முறையை சொல்லிக்கொடுக்க வேண்டும். செய்யுள் எனில் அதன் வார்த்தைகளை எப்படி பிரித்து பார்ப்பது, இலக்கணம் எனில் எந்த வார்த்தையை ஏன் அப்படி பயனபடுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். இவை எல்லாமே நம் பாட திட்டங்களில் இருக்கின்றது அல்லவா? அதை முறையாக மாற்றலாமே?

இம்முறையை எந்த மொழியாக இருந்தாலும் செயல் படுத்தலாம். தமிழில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல தமிழ் அகராதியும், ஆங்கிலம் பயிலும் குழந்தைகளுக்கு முதலில் ஒரு Oxford dictionary-யும் இருந்தால் போதுமே… அவர்களின் ஆர்வமே அவர்களை வார்த்தைகள் பல கற்க உதவுமே…

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் இப்படி சொல்லித் தருவதால் அவர்கள் எந்த புத்தகம் படித்தாலும் அவற்றில் உள்ள புதிய வார்த்தைகளை எளிதாக உள்வாங்கிக்கொள்வர். வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்த பின்பு அவர்கள் பாட புத்தகங்களை எளிதில் படிக்க தொடங்குவர். கதைகளில் வரும் வசனங்களை அவர்கள் தங்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்த தொடங்குவர். எதை படித்தாலும் அக்கருத்துக்களை தங்கள் வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள முயல்வர். அந்நிலையில் நம் பொறுப்பு, அவர்கள் நல்ல புத்தகங்களை படிக்கிறார்களா, என்று கண்காணிப்பது மட்டுமே. சிறு வயதிலே படிப்பது சுலபமாகிவிடும், சுமையாக தெரியாது. படிப்பு என்னும் நற்பழக்கம் அவர்களை சிறுவயதிலிருந்தே நேர்மையான மனிதராக உருவாக்கும்.

அடுத்ததாக, பத்திலிருந்து பதினேழு வயது வரை உள்ள மாணவர்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குழந்தைகளை எவ்வளவு பாடாய் படுத்துகின்றன என்பதை தாங்கள் அறிவீர். போதாதென்று நுழைவுத்தேர்வுகள் வேறு. இவ்வயது குழந்தைகள் மனப்பாடம் செய்வது சுலபம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அவர்களை அதிலிருந்து மீட்க மிகவும் சுலபமான வழி எதுவெனில், அவர்களை கேள்விகள் கேட்க பழக்கப்படுத்துவது.

ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் எல்லா பாடங்களிலும், எல்லா தலைப்புகளிலும் கேள்விகளை வீட்டுப்பாடமாக எழுதிப்பழக ஊக்குவிக்கலாம். வழக்கமாக கேள்விகளை ஆசிரியர்கள் கேட்பர், அதற்கு பதில்களை மாணவர்கள் எழுதி வருவர். இதை அப்படியே தலைகீழாக மாற்றி, ஒவ்வொரு தலைப்பிற்கும் பத்து கேள்விகள் எழுத ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டும் (வீட்டிலும் நாம் சொல்லித்தரலாம்).

பாடபுத்தகங்களில் ஏற்கனவே கேள்விகள் உள்ளனவே, அவை போதாதா? அவற்றை மாணவர்கள் மாற்றி மாற்றி வடிவமைப்பார்களே? – இப்படி உங்களுக்கு சந்தேகங்கள் வரலாம். நல்லது.

மாணவர்கள் பாடப்புத்தகங்களில் உள்ள கேள்விகளை மாதிரிகளாக கொண்டு புதிதாக கேள்விகளை உருவாக்க வேண்டும் என்பதே நம் குறிக்கோள். கேள்வி கேட்டு பதில் அளிப்பது கடினம் தான், அனால், பதில் கொடுத்துவிட்டு கேள்விகள் உருவாக்குவது ஒரு கலை. அக்கலையை அவர்கள் கற்பதன் மூலம் அவர்களின் மனம் விரிவடையும். எந்த பொருளாக இருந்தாலும் அதை எளிதில் பகுப்பாய்வு(analyse) செய்து கருத்தாக்கமும்(conceptualise) செய்ய முடியும். இக்கலையை மாணவர்கள் கற்க எளிதான வழி, அவர்கள் பாடபுத்தகங்களில் உள்ள மாதிரி வினாக்களே.

உதாரணமாக எட்டாம் வகுப்பு(சமச்சீர் கல்வி)  அறிவியல் பாட புத்தகத்தில் முதல் பாடம், முதல் தலைப்பை எடுத்துக்கொள்வோம்.

1. Measurements (அளவீடுகள்)
1.2 Temperature
1.3 Electric Current (I)…

என்று வரிசையாக வரும் தலைப்புகளை படித்து ஒவ்வொரு தலைப்பிற்கு பாத்து கேள்விகள் எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். அப்பாடத்தின் இறுதியில் உள்ள கேள்விகள் பல வகைகள் உள்ளன.

Choose the best answer, True or False, Fill in the blanks, Assertion & Reason, Answer in a word or two (Very Short Answer), Answer the questions given below (Short Answer), Answer in detail, Higher Order Thinking Questions, என ஒவ்வொரு மாதிரிக்குள்ளேயும் பல கேள்விகள் உள்ளன அல்லவா? அவற்றை போலவே உங்கள் கேள்விகள் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வரையறை செய்து வைக்க வேண்டும்.

1.2 Temperature என்ற தலைப்பிற்கு இரண்டு Fill in the blanks கேள்விகள், இரண்டு True or False கேள்விகள், இரண்டு Assertion & Reason கேள்விகள், Answer in detail- என்று இரண்டு கேள்விகள் எழுதவும், என்று கூறினால், குழந்தைகள் பாடத்திற்கு பின்னால் இருக்கும் கேள்விகளை மாதிரியாக வைத்துக்கொண்டு அவரவர்  பாணியில் கேள்விகளை உருவாக்குவர். இதை தொடர்ந்து செய்யும்  பட்சத்தில், நாளாக நாளாக அவர்கள் கேள்விகளும் விரிவடையும், கேள்விகளின் ஆழமும் பெருகும்.

இப்படி செய்வதன் மூலம் வேறு பல பலன்களும் வரும்.

வழக்கமாக கேள்விகள் கேட்டு பதில் சொல்ல முயலும் பொழுது, குழந்தைகள், அதுவும் அறிவு மிகுந்த நம் தமிழ் குழந்தைகள், குறுக்கு வழியான மனப்பாடம் செய்வதை கற்றுக்கொள்கின்றனர்.

மாறாக தலைப்பை கொடுத்து கேள்வி கேள் என்று சொன்னால், அவர்கள் கேள்வி நன்றாக கேட்க வேண்டும் என்றே எந்த தலைப்பாக இருந்தாலும் அதை தீர்க்கமாக படிப்பர், புரிந்தும் கொள்வர்.

எந்த தலைப்பாயினும் புரிந்துகொண்டுவிட்டால் அவர்கள் இனி எக்காலமும் அதை மறக்க மாட்டார்கள் அல்லவா? மேலும், கேள்வி கேட்கும் மூலமாக அவர்கள் எல்லாவற்றையும் ஆராய ஆரம்பிப்பார்கள். எதையும் ஆழமாக பார்க்கும் திறன் அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு எளிதாக வந்துவிடும். எந்த தேர்வை எதிர்கொண்டாலும், “நான் பார்க்காத கேள்வியா?” என்ற மனப்பாங்கும் வரும். இவர்கள் கேட்காத கேள்வியா போட்டி தேர்வுகளில் வந்துவிட போகிறது? அப்படியே வந்தாலும் அக்கேள்விகளை கண்டோ, தேர்வை கண்டோ அஞ்சி விடுவார்களா நம் மாணாக்கள்?

நம் குழந்தைகள் கேள்விகள் மூலம் அறிவை எளிதாக வளர்த்துக்கொள்வர். அவ்வறிவின் மூலம் தங்கள் வாழ்க்கையை திரமப்பட தீர்மானித்துக்கொள்வர். அறிவு மிகுந்து அவர்கள் வளரும் காலங்களில் அவர்கள் காணும் சமூக பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண்பர். பொறுப்பான குடிமக்களாக வலம்வருவர். பல நூல்கள் கற்பர். உலகில் எங்கு சென்றாலும் யாரை சந்தித்தாலும் தன் தனித்துவத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவர். அறிவை வளர்த்த பின் பணம் சம்பாரிக்க அவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்? அவர்கள் நமக்கு பாடம் சொல்லி தரும் நாட்களும் வரும். நம் சமூகம் நாளாக நாளாக மேலும் உயரும். நம் பிள்ளைகள் எந்த துறையாயினும் உலகம் போற்றும் வல்லுனர்களாக வளம்வருவர்.

மேலும் ஒரு நன்மை, குழந்தைகள் எந்த பாடத்தில் நன்றாக கேள்வி கேட்கிறார்கள் என்று ஆசிரியர்களும், பெற்றோரும் கவனித்தால் அவர்கள் எந்த துறை மீது ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் அவர்களை சரியாக வழிநடத்த முடியும் அல்லவா?

மருத்துவர், பொறியாளர் மட்டும் அல்ல வாழ்க்கை, நீங்கள் உங்களுக்காக, உங்களுக்கு பிடித்த வகையில் அமைத்துக்கொள்வதே வாழ்க்கை என்று நாம் அவர்களுக்கு சொல்லாமல் சொல்லி கொடுக்கலாம்.

இந்த சிறிய மாற்றங்களை நாம் விதைப்போமா? நம் குழந்தைகளின் வாழக்கையை மாற்ற நாம் முயல்வோமா? இனி எந்த குழந்தையை பார்த்தாலும், “நன்றாக கேள்வி கேட்கிறாயா?” என்று கேட்டு உற்சாகப்படுத்துவோமா?

மாற்றம் நிலையானது. ஆனால், அம்மாற்றத்தை நம் விருப்பம்போல் அமைத்துக்கொள்வது நம் அறிவின் வெளிப்பாட்டில் உள்ளது.

இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
வினோத்
AuthorVinoth.com

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top
Share via
Copy link