வணக்கம் நான் உங்கள் அன்பு நண்பன் வினோத் எழுதுகிறேன்.

சென்ற பதிவில் மாநில அளவிலான உயிரிவாயு உற்பத்தி திட்டம் பற்றி பேசியிருந்தோம். அதற்கு அனைவரிடமும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் முடிவில் Vertical Farming மற்றும் வீட்டுத்தோட்டம் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி, இப்பதிவை ஒரு தொடர்ச்சியாக பார்க்கவும், படிக்கவும். நன்றி.

நம் தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பு, மக்கள், காய்கனிகளின் விலையேற்றத்தை சமாளிக்க வீடுகளில் தோட்டம் அமைப்பதை பற்றி எடுத்துரைத்தது. அது மிகவும் சிறப்பான திட்டம். அத்திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் விலைவாசி ஏற்றத்தாழ்வுகளை நாம்மால் சமாளிக்கமுடியும் தான். ஆனாலும் அத்திட்டதை நாம் அனைவரும் செயல்படுத்துவதற்கு சாத்தியங்கள் குறைவே.

நாம், நம் வேலைகளுக்காகவும், வாழ்க்கைக்காகவும் பல சிரமம்ங்களுடன் அலைந்துகொண்டிருக்கும் நேரங்களில் அப்படி தோட்டங்களை வீட்டில் அமைத்து, அவற்றை தினமும் பராமரித்து, வளர்த்து, பேணிப்பாதுகாத்து, ஒருவழியாக அறுவடை செய்வதற்குள் அக்காய்கனிகளின் விலைகள் மளமளவென சரிந்துநிற்பதை பார்த்து, இதற்கு பருத்திமூட்டை godown-லேயே இருந்திருக்கலாமே என்று தோணும். மேலும், விலையேற்றதிக்கேற்றாற்போல் நாமும் அதிகமாக சம்பாரித்துக்கொள்ளலாம், சமாளித்துக்கொள்ளலாம், என்றும் மருபுறம் தோணும்.
இது ஒரு நல்ல திட்டம். இதனால் பலருக்கும் பயன் உண்டு. அனால், பொறுப்புகளை மக்களிடம் குடுத்தால் பலர் செயல்பட தயங்குவர். மாறாக, அப்பொறுப்புகளை திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளாக மாற்றினால் மக்களும் பயனடைவர், அத்திட்டங்களை செயல்படுத்தும் அரசும் பயன்பெறும்.
ஆகையால், அரசே வீட்டுத்தோட்டங்களை அமைத்தலை ஒரு திட்டமாக வடிவமைத்து, அதை எப்படி செயல்படுத்தமுடியும் என்பதை என்னால் முடிந்த அளவிற்கு சிந்தித்து எழுதுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் comment-ஆக பதிவு செய்யுங்கள்.
வீட்டுத்தோட்டம்
முதலில், நகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களிலும், தனிவீடுகளிலும், அவரவ விருப்பத்திற்கேற்றாற்போல் தோட்டங்கள் அமைப்பதை பார்ப்போம்.

எல்லோர் வீடுகளிலும் ஒரு முகப்போ(Balcony), அல்லது முற்றமோ, அல்லது வீட்டை சுற்றி கொஞ்சம் காலி இடமாவது இருக்கும். முதலில், அப்படி இடங்களில் தோட்டம் அமைப்பது பற்றி சில விதிமுறைகளை அரசு வகுக்கலாம். மண் வகைகளைப் பொருத்தும், சதுரஅடி கணக்குப்படியும், தட்பவெட்ப, மற்றும் பருவ மாற்றங்களைப் பொருத்தும் என்னென்ன செடிகளும் கொடிகளும் வளர்க்கமுடியும் என்பதை அரசு மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவரலாம்.
பள்ளிகளிலேயே விவசாயக்கல்வியை ஒரு தனி பாடமாக கொடுத்தால் எதிர்காலத்திற்கும் நன்மைபயக்கும் . நம்மில் பலர் செடிகளை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்ற அனுபவம் இல்லாததால் தான் தோட்டக்கலை மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம். மாற்றாக அரசே தோட்டக்கலை மீது ஆர்வம் காட்டினால் மக்களும் ஒத்துழைப்பர் அல்லவா?

இவ்வாறு ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், அதனுள் ஒவ்வொரு பகுதி வாரியாகவும் என்னென்ன காய்கள், கனிகள் மற்றும் பயிர்களை வீடுகளில் வளர்க்க முடியும் என்பதை அரசின் விவசாய வளர்ச்சித்துறை மக்களிடம் எடுத்துக்கூறலாம். வீடுகளில் மக்கள் தங்களுக்கு தேவையான, மற்றும் பிடித்த காய்கனிகளின் செடிகளை நாற்றுப்பண்ணைகளிலிருந்து தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம். அவற்றை வீடுகளில், பூந்தொட்டிகளிலும், காலி இடங்களிலும், ஏன், தேவைப்பட்டால் தங்களின் வீட்டில் வெயில்படும் திறந்தவெளியிலேயே ஒரு புதிய design கொண்டு தோட்டத்தை உருவாக்கலாம்.

இத்தோட்டத்திற்கு நம் உயிரிவாயு உற்பத்திமையங்களில் இருந்து உரங்களை சேகரித்து அரசே விநியோகமும் செய்யலாம் (எதிர்காலங்களில்). தேவைப்பட்டால் உரங்களை packaging செய்து சிரியவிலையிலும் விற்கலாம். எந்தெந்த செடிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற தகவல்களை video-வாக பதிவு செய்து வலயத்தளங்கள் மூலம் மக்களுக்கு கொண்டுசேர்க்கலாம். மக்களும் நிதானமாக செடிகளை வளர்க்க கற்றுக்கொள்வர்.
ஏற்கனவே பலரும் அப்படி வீடியோக்கள் பதிவிட்டுள்ளனர். அவர்களை அரசு அங்கீகாரம் செய்து ஊக்கப்படுத்தலாம். நம் மாநிலத்திற்கேற்றாற்போல் நம் மண்வகைகள், மற்றும் தட்பவெட்பநிலைக்கு ஏற்றாற்போல் அத்தகவல்களை புதிதாகவும் உருவாக்கி வெளியிடலாம்.

உதாரணமாக, நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடுகளில் தண்ணீர்ப்பஞ்சம் இருக்காது. அங்கே அதிகம் நீர் தேவைப்படும் பயிர்களையும் காய்கனிகளையும் (beans, பீட்ரூட், carrot, முள்ளங்கி, கீரைகள், etc) வளர்க்கும் முறைகளை தனியாக வெளியிடலாம். நீராதாரங்கள் குறைவாக இருக்கும் வறண்ட பகுதிகளில், அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர்களான, சோளம், வெண்டைக்காய், கத்திரிக்காய், தினைகள், கடுகு, கடலை மற்றும் பருப்பு வகைகள், போன்ற பயிர்களை வளர்க்கும் முறைகளை சொல்லிக்கொடுக்கலாம். (தக்காளி பல வகைகளில் கிடைப்பதால், எல்லா இடங்களிலும் அதை வளர்க்க முடியும். சில தக்காளி வகைகள் வறண்ட பகுதிகளிலும் வளரும்.)

ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த குடும்பத்தினரும் பராமரித்து வளர்க்கும் செடி, கோடிகள் நாளடைவில் பூப்பூக்கும், காய்காய்க்கும், கனிகளும் கொடுக்கும். முறையாக தினமும் பராமரித்துவந்தால் நாம் அவற்றிடமிருந்து மாதக்கணக்கில் தேவைக்கேற்றாற்போல் உற்பத்தி செய்துகொள்ளமுடியும்.

சரி, இவ்வாறு எல்லோரும் செய்வதால் விவசாயிகளுக்கு பாதிப்பு வந்துவிடுமே என்று நீங்கள் யோசிக்கலாம். கவலை வேண்டாம். அனைவருக்கும் அணைத்து காய்கனிகள் அவரவர் விளைச்சலில் கிடைத்துவிடாது, அவர்கள் சந்தைகளை தேடிவர அவசியம் எப்பொழுதும் இருக்கும்.

மேலும், அரசு இத்திட்டத்தை ஒருங்கிணைத்து, விளைச்சல்களை பொதுவுடைமையாக்கி Ration கடைகள் மூலம் அனைவருக்கும் சமமாக விநியோகிக்கலாம். விவசாயிகளின் நலன் கருதி, அவர்களிடம் எஞ்சும் காய்கனிகளை சேமித்துக்கொண்டு, வறட்சிகாலங்களிலும், விலையேற்ற காலங்களிலும் மக்களுக்கு விநியோகம் செய்யமுடியும். இதற்காக அரசு வழக்கமான கிடங்குகளை தவிர, புதிய பல cold storage facilities-களை தனியாக உருவாக்கலாம்.
வீட்டுத்தோட்டம் திட்டத்தை இன்னும் நவீனமாகவும் செயல்படுத்தமுடியும். அதற்க்கு தேவையான ஆராய்ச்சிகளை (Research & Development) தொடங்கி அவற்றின் முடிவுகளை கொண்டு திட்டங்களை வடிவமைத்தல் நம் முதல் இலக்கு.
மேலும், ஒரு புதிய திட்டத்தையும் நாம் இப்போது சிந்தித்து பார்க்கலாம். அதுவே,
செங்குத்து விவசாயம் எனும் Vertical Farming

Vertical Farming என்பது, நிலம் அல்லாமல், நீர், மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செடிகள், மற்றும் பயிர்களை வளர்ப்பது. இந்த விவசாயமுறை மேற்கெத்திய நாடுகளில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளதாக எண்ணி, மக்களும் பிற உயிர்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழவேண்டுமெனில், விவசாய முறைகளில் மாற்றம் வேண்டும் என்று யோசித்த பல அறிஞர்கள், இப்படி முறைகளை புதிதாக வகுத்துள்ளனர்.
மேலும், இவ்விவசாய முறையை மூன்று விதங்களில் செயல்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர்.

Hydroponics – மண்ணற்ற நீர் சார்த்த விவசாயம்,
Aquaponics – தண்ணீரையும் மீன்களையும் சேர்த்து பயிர்களை விளைவித்தல்.
Aeroponics – மண் மற்றும் நீர் இல்லாமல், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை காற்றுடன் கலந்து செடிகளின் மேல் தெளித்து விடும் முறை. இவற்றில், hydroponics முறை தான் தற்போது எளிதாக உள்ளதாகவும், அதன் மூலம் வரும் விளைச்சல் ஓரளவிற்காவது இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இம்மூன்று முறைகளிலும் பயிர்களை வளர்க்க அவ்வளவாக மண் தேவைப்படுவதில்லை, அதனால் தான் இவற்றில் இருந்து வரும் பயிர்களில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளதாகவும் ஒரு கருத்து உண்டு. மண்ணிலிருந்து வளர்ந்தால் தானே செடிகள் அவற்றிற்கு தேவையான ஊட்டச்சத்துகளை பிரித்தெடுத்து செழிப்பாக வளரமுடியும்?

மேற்கெதிய நாடுகளில் உள்ள பனிக்காலங்களில் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்ற காரணத்தால் தான் மண்ணை தவிர்க்கிறார்கள் போலும். அனால் நம் நாட்டில் தான் வருடம்தோறும் சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கிறதே. நாம் ஏன் நம் நாட்டிற்கேற்றாற்போல் Vertical Farming முறையை மாற்றிக்கொள்ளக்கூடாது?

நம் மாநிலத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் Vertical Farming செய்ய முடியும். இதற்க்கு தேவை, கொஞ்சம் செழிப்பான மண்ணும், நிலையான நீராதாரங்களும் தான். இதற்காக தற்போது உள்ள விவசாய நிலங்களை நாடவும் தேவை இல்லை அவற்றை மாற்றவும் தேவை இல்லை. தரிசுநிலங்களில் செழிப்பான மண்ணை கொண்டு பெரிய அளவில் தொட்டிகள் அமைத்து, (அவற்றில் நம் உயிரிவாயு திட்டத்திலிருந்து கிடைக்கும் உரத்தையும் கலந்து) செடிகொடிகள் வளர மண்ணை தயார் செய்யலாம்.

ஆரம்பக்கட்டங்களில் சுமார் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக தொட்டிகளை செங்குத்தாக அடுக்கி வைத்து விவசாயம் செய்வது சிறப்பாக இருக்கும். நாளடைவில் பல அடுக்குகள் கொண்டு தொட்டிகள் அமைத்து அதில் பயிர்களை வளர்த்து நல்ல விளைச்சல் காணவும் முடியும். இவ்வாறு இரண்டு மூன்று அடுக்குகளாக வைக்கும் பொது அந்த கட்டமைப்பு திடமாக இருக்க வேண்டும். எனவே, அவற்றை உற்பத்தி செய்யுமிடங்களில் முறையான தரநிலைகள், உருவளவுகள் என அனைத்தையும் அரசே வரையறுத்தல் நல்லது.

செடிகளை வளர்க்கும் தொட்டிகளை மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை வைத்து உற்பத்தி செய்யலாம். இதற்க்கு ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருக்கும் நெகிழி உற்பத்திசாலைகளை மறுசுழற்சி மையங்களாக மாற்ற அரசு ஊக்கப்படுத்தலாம். இப்படி செய்வதால் நாளடைவில் புதிய நெகிழி (virgin plastic) உற்பத்தியை குறைக்க முடியும், மேலும், இருக்கும் நெகிழியை இப்படி திட்டங்கள் மூலம் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் அவை நீராதாரங்களையோ, மண்ணையோ, காற்றையே மாசுபடுத்தாமல் இருக்கும்.
தொட்டிகள் அமைத்தாகிவிட்டது. அடுத்து, அவற்றில் மண்ணையும் உரத்தையும் கலந்துவிட்டு அதில் விதைகளை தூவி நீர் பாய்ச்ச வேண்டும்.

Vertical Farming முறைகளில் மிகவும் சாதகமான பயன் என்னவெனில் அது சுலபமான நீர்ப்பாசன முறைகளே. Drip Irrigation எனப்படும் சொட்டுநீர் பாசனம், Sprinkler Irrigation(நீர் தெளித்தல்), Subsurface Irrigation(நிலத்தடி நீர்ப்பாசனம்) என, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் அனைத்து பாசனமுறைகளையும் திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தலாம். வழக்கமான விவசாய முறைகளை விட இம்முறைகளில் தண்ணீர் தேவை அவ்வளவாக இருக்காது.

தரிசு நிலங்களில் இம்முறையை நாம் செயல்படுத்துவதால், நம்மால் அந்நிலங்களில் புதிதாக நீர்நிலைகளை உருவாக்கவும் முடியும். குட்டைகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என, காலப்போக்கில் நீர்நிலைகளை ஒவ்வொன்றாக பெரிதுபடுத்தவும் முடியும். அந்நீர்நிலைகளை சுற்றி உள்ள நிலங்களும் பசுமையாகும், காடுகளும் வளரும், பல்லுயிரும் வாழும்.
இத்திட்டங்களை செயல்படுத்த சில ஆரம்பவழிகள், மற்றும் சில நன்மைகள்
இத்திட்டத்தை ஒரு business model-ஆக இளைஞர்களுக்கு அரசு அறிமுகப்படுத்தலாம். Vertical Farms நிறுவ வங்கிக்கடன்கள், விவசாயக்கல்வி, மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகம், விளைச்சல்களை குறைந்தபட்ச ஆதார விலை(Minimum Support Price) முறையில் கொள்முதல், என பல்வேறு வழிகளில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்த ஊக்கப்படுத்தலாம்.

மாறாக, இத்திட்டத்தை இளைஞர்களுக்கு ஒரு பகுதிநேர வேலை வாய்ப்பு திட்டமாக உருவாக்கவும் முனையலாம். மாவட்டவாரியாக Vertical Farming மையங்களை உருவாக்கி, அதில் இளைஞர்களுக்கு பயிற்சி, மற்றும் பகுதிநேர வேலைகளை உருவாக்கலாம். பயிர்களை நடுவதிலிருந்து விளைச்சல் வரை வேலைகளை பல படிகளாக பிரித்து, அணைத்து படிகளையும் இளைஞர்கள் கற்குமாறு செய்யலாம். இதன்மூலம் இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வமும் காட்டுவர், காலப்போக்கில் விவசாயத்தை லாபகரமாக செய்ய பல வழிகளும் சிந்திப்பர்.
வீட்டுத்தோட்டம் திட்டத்தில் நாம் பார்த்த அணைத்து தானியங்களும் (செடிகொடிகள் மட்டும்) Vertical Farming முறையில் உற்பத்தி செய்யமுடியும். மாவட்ட வாரியாக வீட்டுத்தோட்டமோ, அல்லது Vertical Farming திட்டமோ, அரசாங்கம் முறையாக வரையறை செய்து செயல்படுத்துவதன்மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கமுடியும், வருவாயும் ஈட்டிக்கொள்ளமுடியும்.

மேலும், இத்திட்டத்தைத் தொடர்ந்து உணவு பதப்படுத்தும் தொழில்முறைகளை (Food Processing Industries) இன்னும் அதிகப்படுத்தினால், அதிகமாக விளைச்சல் வரும் காலங்களில் காய்கனிகளை சேகரிப்பது மட்டுமல்லாது அவ்வுணவுப்பொருட்களை மதிப்புக்கூட்டு செய்து பிரமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
ஒரு சமுதாயத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தால்தான் மற்றத்துறைகளும் நன்றாக இயங்கும். காலத்திற்கேற்ப நம் விவசாய முறைகளை மாற்றியமைத்தால் நம் சமுதாயத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளவும் முடியும், பல வழிகளில் முன்னேறவும் முடியும்…
இத்திட்டங்கள் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை தாங்களும் சிந்தித்து comment-இல் பதிவு செய்யுங்களேன்…
மாற்றங்களை எதிர்நோக்கி உழைப்போம், ஒன்றாக உயர்வோம்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு நண்பன்,
வினோத்,
AuthorVinoth.com
-
Chapter 1. The ‘Science’ of Reality₹130
-
Chapter 2. The ‘Soul’ of SpiritualityProduct on sale₹90
-
Chapter 3. Senses & ConsciousnessProduct on sale₹90
-
Chapter 4. Chaos & OrderProduct on sale₹100
-
Chapter 5. TimeProduct on sale₹90
-
Chapter 6. EnergyProduct on sale₹120
-
Chapter 7. GodProduct on sale₹125