வணக்கம், நான் உங்கள் அன்பு சகோதரன் வினோத் எழுதுகிறேன்.
சமீப காலமாக நம் நாட்டின் மிகப்பெரிய கவலை, சமையல் எரிவாயு, பெட்ரோல், மற்றும் டீசல் ஆகியவற்றின் தொடர்ந்த விலையேற்றம் தான். சம்பாரிக்கும் பணத்தில் பாதி இவற்றிற்கே செலவாகிறது. பெட்ரோல் மற்றும் டீசல்-இன் விலையேற்றமாவது அவ்வப்போது குறைகிறது, ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தான் சற்றும் சளைக்காமல் ஏறிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசும் கருணை பாராமல் வரிச்சுமையை மக்கள் மீது திணிக்கிறது. அதை ஏன் என்று கூட நம்மால் கேட்க முடியவில்லை. கேட்டாலும், ‘தேசவிரோதி’ என்ற பட்டம் அளிக்க பலரும் கிளம்பி வருவர்.
அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது நாம், நம் அவசிய தேவைகளை நிறைவு செய்ய வேறு சில வழிகளும் சிந்திக்க வேண்டும். இதற்க்கு என்னால் முடிந்த சில யோசனைகளை எழுதுகிறேன், சற்று பொறுமையாக படித்து பாருங்கள். பின்னர் உங்கள் கருத்துக்களையும் என்னிடம் பகிருங்கள், நாம் கலந்தாலோசிக்கலாம். இது சாத்தியம் எனும் பட்சத்தில், இந்த திட்டத்தை நம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் உதவுங்கள். இப்பொழுது நம் திட்டத்திற்குள் போகலாம்.
உயிரிவாயு(Biogas) மற்றும் அதன் உற்பத்தி வழிகள்
நாம் பள்ளிக்காலங்களில் அறிவியல் பாட புத்தகங்களில் நாம் படித்த மிகவும் எளிமையான ஒரு கருத்துப்படிவம் தான் உயிரிவாயு (Biogas) திட்டம். அனைவரின் வீட்டிலும் இதை செயல்படுத்த முடியும், மிகவும் எளிமையான முறையிலும் இதை உருவாக்க முடியும் என்றும் நாம் படித்திருக்கிறோம். இதை தான் நம் திட்டத்திற்கு மூலதனமாக இப்போது பயன்படுத்தப்போகிறோம்.
இதற்க்கு தேவையான மூலப்பொருட்கள் நம் வீடுகளிலேயே கிடைக்கின்றன. காய்கனிகள் தோள்கள், வீட்டிலும் தெருக்களிலும் வளர்க்கும் மரங்களில் இருந்து உதிரும் இலைகள், கொடிகள், ஒடிந்த கிளைகள், நாம் அருந்தும் உணவுகளின் மிச்சங்களும், நம் வீடுகளில் இருந்து திரட்டப்படும் கழிவு நீரும் கூட தான். இது போக, எண்ணற்ற உணவகங்களும் எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்றன. அவ்வுணவகங்களில் இருந்து வீணான உணவும் நம் திட்டத்திற்கு பயன்படும். இவ்வாறு பல வழிகளில் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்து உயிரிவாயுவை பிரித்து எடுக்கலாம்.
இதனடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும், தொகுதிவாரியாகவும் (ward), கிராமவாரியாகவும் உயிரிவாயு உற்பத்தி மையங்கள் உருவாக்கலாம். கிராமங்களில் நமக்கு தேவையான மூலப்பொருட்களை ஏராளம் தானே? அம்மையங்களில் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உயிரிவாயுவை பிரித்து எடுக்க நமக்கு தேவை சற்று நேரமும், தண்ணீரும் தான்.
தேவைப்பட்டால், உயிரியல் தொழில்நுட்ப (Biotechnology) முறைகளை கொண்டு உயிரிவாயு உமிழும் பாக்டீரியாக்களின் ஆற்றலை அதிகப்படுத்தவும் செய்யலாம். அதற்கான ஆராய்ச்சிகளை ஆரம்பத்திலிருந்தே ஊக்கப்படுத்தவும் செய்யலாம். இவ்வாறாக காலப்போக்கில் உற்பத்தியை அதிகப்படுத்தவும் முடியும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் வாயுவை சிலிண்டர்களில் நிரப்பி மக்களுக்கு, அதுவும் அந்தந்த தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்யலாம். உற்பத்தித்திறன் அதிகமாகும் வரையில் பங்கீட்டு முறையை செயல்படுத்தி அணைத்து குடும்பத்தினருக்கும் சிலிண்டர்கள் கிடைக்குமாறு செய்யவும் முடியும். இதனால் நாம் முழுவதுமாக LPG சிலிண்டர்களை நம்பி இருக்கும் அவசியம் குறையும்.
உதாரணமாக, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் உயிரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்தால் வருடத்தில் பாதி நாட்களாவது மக்களின் மாதாந்திர செலவுகள் குறையும் அல்லவா?
இப்பொழுது உயிரிவாயு உற்பத்தியை அதிகரிக்க சில வழிகளை காணலாம்.
1. உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்தல்.
முதலில், தமிழ்நாட்டில் பரவி இருக்கும் அம்மா உணவகங்களை சற்று சீரமைக்கலாம். அவ்வுணவகங்களின் உணவுப்பட்டியலை நவீனமயமாக்கினால் அங்கு உணவருந்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உதாரணமாக, தற்போது இருக்கும் உணவுகளுடன் சேர்த்து, பல புதிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மூன்று வேலையும் உணவில் நவதானியங்கள், கோதுமை, காய்கனிகள் என அனைத்தையும் சேர்த்து ஒரு புதிய உணவுப்பட்டியலை தயாரிக்க வேண்டும். இந்த பொறுப்பை பிரபல சமையல் வித்தகர்களிடம் கொடுத்தல் போதும். அவர்களே தற்போதைய காலத்திற்கேற்றாற்போல் புதிய உணவுகளை (salad வகைகள், களி வகைகள், என பல.) உருவாகுவர்.
மலிவான விலை, மற்றும் தரமான உணவு கிடைக்கும்பட்சத்தில் மக்கள் அனைவரும் அரசு நடத்தும் அம்மா உணவகங்களை நாடி செல்வார்கள். இப்போது நீங்கள் கேட்கலாம், எல்லாரும் அம்மா உணவகங்களில் சாப்பிட்டால் பின் உயிரிவாயு எதற்கு, LPG சிலிண்டர் தான் எதற்கு? என்று.
இங்கே தான் நம் ஒரு சிறிய கணக்கு போட வேண்டும். நம் தமிழ்நாட்டில், வாரநாட்களில் கிட்டத்தட்ட 70% மக்கள் வீட்டின் வெளியே தான் இருக்கின்றனர். அது அவர்களின் பணிகளுக்காகவோ, மாணவர்களாயின் பள்ளிகளுக்கோ சென்று தான் ஆகவேண்டும். இவ்வாறு செல்லும் பொழுது மதிய உணவிற்கு அவர்கள் வீட்டு சாப்பாடு கட்டி கொண்டு செல்வது வழக்கம். வெளியே சாப்பிட்டால் உடல்நலனில் கோளாறு வரும் என்ற அச்சம், மற்றும், செலவுகளை குறைக்கவேண்டும் என்ற எண்ணமும் தான். அதில், மதிய உணவு செய்வதற்கே நம்வீட்டு பெண்களின் பாதி நேரம் வீணாகிறதல்லவா?
அதற்க்கு பதிலாக, வேலை பார்க்கும் இடங்களிலும், பள்ளிகளிலும் அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு வழங்கினால், மக்களுக்கு வாரநாட்களில் மதியஉணவு சுலபமாகவும் கிடைக்கும், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உணவு பற்றிய மனஅழுத்தமும் இருக்காது. தேவைப்பட்டால் மாதாமாதம் அவரவர் விருப்பத்திற்கேற்ப உணவுகளை தேர்தெடுத்து உணவகங்களில் முன்பதிவு செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.
முன்பதிவு முறையை அரசே உருவாக்கவும் முடியும். புதிதாக வடிவமைக்கப்படும் உணவுப்பட்டியலில் அவரவருக்கு பிடித்த உணவுகளை தங்கள் அலுவலகத்திற்கே விநியோகம் செய்யலாம். Swiggy, zomato போன்ற நிறுவனங்கள் இதற்க்கு உதவும். தேவைப்பட்டால் அரசே விநியோகம் செய்ய இளைஞர்களை பணியமர்த்தி புதிய பணிகளையும் உருவாக்கலாம்.
இவ்வாறு உணவுகளை மக்களை சென்றடைய வைப்பது ஒருபுறம் இருக்க, சமைக்கும் அணைத்து உணவும் அருந்தப்படும் என்று கூறமுடியாது அல்லவா? வீணாகத்தான் செய்யும். அப்படி வீணாகும் உணவுகளை முறையாக சேகரித்து, நம் உயிரிவாயு கூடங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அங்கே, வழக்கம்போல் வீணான உணவிலிருந்து உயிரிவாயுவை பிரித்து சேகரித்துக்கொள்ள முடியும்.
2. மக்கும் பொருட்களைவைத்து பொட்டலபொருட்கள்(packaging products) தயாரித்தல்.
அடுத்து, நெகிழி(plastic) பயன்பாட்டை குறைத்து, மக்கும் தன்மை கொண்ட இயற்கையான பொருட்களை கொண்டு செய்த தட்டுகள், குவளைகள் போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் மஞ்சள்பை திட்டத்தின் நீட்சி போல் தான் இதுவும். இது சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான மாற்றம். உணவு மற்றும் இதர பொருட்களை packaging செய்ய இலைகளால் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் உறைகள், கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட குவளைகள் போன்றவற்றை அதிகமாக புழக்கத்தில் கொண்டுவரலாம்.
ஏற்கனவே தேங்கி நிற்கும் நெகிழிகளை அகற்ற வேறு சில வழிகள் உண்டு, அவற்றை மற்றொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். மக்கக்கூடிய உறைகள் மற்றும் குவளைகளை எல்லா உணவகங்களுக்கு விநியோகம் செய்யலாம். இவ்வாறு செய்தால் பொதுஇடங்களில் சேரும் மக்கும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து நம் உயிரிவாயு மையங்களுக்கு சுலபமாக கொண்டுசேர்க்க முடியும்.
3. கருவேலமரங்களை ஒழித்தல்.
நம் மாநிலம் முழுவதும் பரவிக்கிடக்கும் கருவேலமரங்கள் நம் நிலத்தடிநீரை உறிஞ்சியெடுத்து மண்ணை பாழாக்குகின்றன. அம்மரங்களை வேரோடு எடுத்து அவ்விடங்களில் நன்றாக இலைகள் தரிக்கும் மரங்களை தேர்வுசெய்து நட வேண்டும். காலப்போக்கில் அவற்றில்லிருந்து விழும் இலைகள், கிளைகள், முதியகனிகள் என அனைத்தையும் நம் உயிரிவாயு மையங்களுக்கு அனுப்பமுடியும்.
அத்தத்துடன் நகரங்களில் சாலையோரம் வளர்ந்துகிடக்கும் கலைகளையும் அகற்றிவிட்டு, அவ்விடத்தில் செடிகொடிகளையும், நட்டுவைக்கலாம். நகரங்களும் பசுமையாவன, உயிரிவாயு உற்பத்திசெய்யவும் அவை உதவுவன.
4. கிராமங்கள்
கிராமங்களில் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வைக்கோல், நெல் உமி, சங்கங்கள், சக்கைகள் என பல மூல பொருட்கள் நமக்கு கிடைக்கும். இவதரை வைத்துக்கொண்டு பெரியஅளவிலான உயிரிவாயு உற்பத்தி மையங்களை அமைக்கவும் முடியும். அதனால் எல்லா கிராமத்து மக்களுக்கும் மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.
மேலும் சில மாற்றங்கள்
உயிரிவாயு உற்பத்தி நம் வரிச்சுமையை மட்டும் குறைக்காது, நமக்கு இன்னும் சில வழிகளிலும் அது உதவும். நாம் முன்னதாக பார்த்தபடி, உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்வதால், அரசு, மாவட்டவாரியாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், உயிரிவாயு உற்பத்தி மையங்களை பராமரிப்பது, அதற்க்கு தேவையான உதிரி சேவைகள், என பல பரிணாம வளர்ச்சிகளையும் காலப்போக்கில் நம்மால் காணமுடியும்.
உணவுப்பழக்கங்களை மாற்றுவதாலும், அம்மா உணவகங்களின் சேவைகளை அதிகப்படுத்துவதாலும் அரசுக்கு வருமானமும் அதிகரிக்கும். உயிரிவாயுவை விநியோகம் செய்ய, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் LPG டீலர்களை சேர்த்துக்கொண்டால், சிலிண்டர் நிரப்பும் மையங்களை நிறுவினால் மட்டும் போதும், அவர்களே சிலிண்டர்களை நிரப்பிக்கொண்டு மக்களிடம் விநியோகம் செய்வர்.
உயிரிவாயு உற்பத்திவிலை (Production cost) கம்மியாகத்தான் இருக்கும், ஏனெனில் நம் கழிவுகளை அல்லவா மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறோம். இதனால் விற்கும்விலையும்(Selling Price) கம்மியாகத்தான் இருக்கும், மக்களுக்கும் பெரிய சுமையாக இருக்காது. அரசும் இதன்மூலம் வருவாய் ஈட்டமுடியும், நம் மாநிலத்திலிருந்து LPG சிலிண்டர்கள் மூலமாக வெளியே செல்லும் பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.
மேலும், இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் (renewable energy source) என்பதால், உயிரிவாயு மையங்கள் என்றும் அழியாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். காலப்போக்கில் இதன் பயன்களும் விரிவடையும். பின்னாட்களில் மிசாரத்தில் இயங்கும் சமையல் இயந்திரங்கள்/அடுப்புகள் அதிகமாகும் நிலை வரும்பொழுது உயிரிவாயுவை கொண்டு மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.
நம் உயிரிவாயு மையங்களில் வாயுவை பிரிந்தவுடன் கிடைக்கும் கழிவுகளை உரமாக பயன்படுத்தி வீட்டுத்தோட்டம், Vertical Farming போன்ற முறைகளையும் கொண்டுவரலாம். இதைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இப்போதைக்கு, இந்த திட்டத்தை எப்படி செயலாக்கம் செய்யமுடியும் என்று நாம் அனைவரும் சிந்திப்போம்.
இத்திட்டத்தில் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவர முடியும், மேலும் சிறப்பாக செயல்படுத்தவும் முடியும். மேலும் நம் திட்டத்திற்கு மக்களாகிய நாம், நம் அரசுடன் எப்படி ஒத்துழைக்கவேண்டும் என்று அனைவரும் சிந்திப்போம்.
சரி, இத்திட்டத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும், திட்டத்திற்கு தேவையான பரிந்துரைகளையும் பொதுவெளியில் அனைவரிடமும் பகிருங்கள், கலந்துரையாடுங்கள். மேலும், இத்திட்டத்தை நம் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும் உதவுங்கள்.
மாற்றவிதையை நான் தூவிவிட்டேன், அதை மரமாய் வளர்ப்பது நாம அனைவரின் கையிலும் இருக்கிறது.
நிதானமாக சிந்திக்கவும், திரமப்பட செயல்படவும்.
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
வினோத்
AuthorVinoth.com
பின்குறிப்பு: என் முதல் புத்தகத்தை (The Concept of ‘God’) ஒரு வலைப்பதிவுத்தொடராக (Blog Series) வெளியிட்டுள்ளேன். உங்கள் e-mail-இல் தினமும் ஒரு blog என, 75 நாட்களில் என் புத்தகத்தை உங்களால் படித்துமுடிக்க முடியும். அறிவியலும் ஆன்மீகமும் கலந்த என் பற்பல கண்ணோட்டங்களை படித்துப்பாருங்கள். விருப்பமுள்ளவர்கள், இந்த இணைப்பை தொடர்ந்து வலைப்பதிவுத்தொடர் பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும்,
The Blog Series —-> authorvinoth.com/the-blog-series-intro/
Subscribe செய்து நாளும் பல புதிய தகவல்களை படித்து மகிழவும்!